Skip to main content

‘கொம்புல பூவைச் சுத்தி நெத்தியில் பொட்டு வச்சு’ - சென்னையில் ஜல்லிக்கட்டு; கமல் முயற்சி

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

 

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7 aaம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைக் கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் வந்தடைந்துள்ளது.

 

இந்திய ஒற்றுமைப் பயணத்திற்காக டெல்லியில் நடைபெற்ற பேரணியில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

 

இந்திய ஒற்றுமைப் பயணம் முடிந்த பின் தமிழகம் திரும்பிய பின் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஜனவரி 6 இல் விருந்து ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

கட்சியினர் உடனான கூட்டம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “கட்சி நிர்வாகிகளிடம் பேசினோம். ஒரு குரல் கேட்டதும் அவர்கள் திரண்டு டெல்லிக்கு வந்தார்கள். பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார்கள். இது முதற்கட்ட நடவடிக்கை தான். பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்ட யாத்திரை இது. அதையும் சொல்லிவிட்டு அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் சொன்னோம். என் மனதில் உள்ள திட்டங்களில் ஒன்று சென்னையில் ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்து நடத்த வேண்டும் என்பது. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயன்று வருகிறோம். மற்றபடி கட்சி சம்பந்தமான விஷயங்களை விவாதித்தோம். 

 

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடந்த இடத்திலேயே நடத்த முடியாது. அதில் சில சட்டச்சிக்கல்கள் உள்ளன. ஆனாலும் சென்னையில் நடத்த வேண்டும். நகரத்தில் உள்ளவர்களுக்கு அதன் அருமை தெரியவேண்டும் என்பது எங்கள் ஆசை.” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்