முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். சமூக ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டார். முதலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாக பேசிய சங்கர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேச ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய சீமான், ''கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிய அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப் பாருங்க.. ஒருநாள் நான் வந்து உடைக்கலன்னா பாருங்க..
யார் கேட்டா பேனா சின்னம். ஏன் பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள்; நினைவிடம் கட்டி உள்ளீர்களே, அங்கே வையுங்கள் கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க காசு இல்லை. பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. இதனால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' என்று பேசினார்.
இதன் பின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, மாற்றுக்கருத்து சொன்னால் எதிர்ப்பது; கூச்சலிடுவது என்பது மிக அநாகரீகம். அதற்கு கருத்துக்கேட்புக் கூட்டம் என வைக்காமல் கட்சிக் கூட்டம் நடத்திவிட்டு போலாம். கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் வைக்கலாம். அதை ஏற்கிறோம். ஆனால் கடலுக்குள் வைக்கக் கூடாது.
பள்ளியை சீரமைக்க பணம் இல்லை என்று சொல்கிறார்கள். பேனா வைக்க பணம் எங்கிருந்து வருகிறது. நினைவுச் சின்னத்தினை கடலுக்குள் வைப்பதை ஏற்க முடியாது. வைக்க விடாமல் தடுக்க கடுமையான போராட்டங்களை செய்வோம். கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சுதந்திரமாக பேச என்னை விடுவார்களா? ஒரே சத்தம். அதற்கு மேல் நானும் சத்தம் அவ்வளவு தான்” எனக் கூறினார்.