அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கச்சைக்கட்டினார்கள் மூத்த அமைச்சர்கள். அவர்களுக்கு பதிலடி தந்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஹிந்து சமூகத்தை ஆதரித்தும் இஸ்லாமியர்களை எதிர்த்தும் பேசி வரும் ராஜேந்திரபாலாஜியை கண்டிக்கும் வகையில் கடந்த 4-ந்தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பலரும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
குறிப்பாக, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தினரை பகைத்துக்கொள்வது தேர்தலில் நமக்கு பாதகமாக அமையும். ராஜேந்திரபாலாஜி துடுக்குத்தனமாக எதையாவதுப் பேசி கட்சிக்கு கெட்டப்பெயரை உருவாக்கி விடுகிறார். இனி வரும் நாட்கள் தேர்தலை மையப்படுத்தித்தான் அரசியல் செய்ய வேண்டியதிருக்கும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது ‘’ என தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அப்போது, ‘’ நான் பேசியதில் என்ன தவறு ? எந்த வகையில் என்னுடைய பேச்சில் தவறை அமைச்சர்கள் கண்டுபிடித்தார்கள் ? நீங்கள் ஓட்டு அரசியலைப் பத்தி பேசுறீங்க. நான் சமுக அவலத்தைப் பத்தி பேசுறேன். திமுக செய்ற அரசியலை அம்பலப்படுத்துவதற்காகத்தான் அப்படி பேசினேனே தவிர, முஸ்லீம்களை காயப்படுத்தவில்லை. அவர்களுக்கு எதிராகப் பேசணும்ங்கிறது எனக்கு வேண்டுதலும் கிடையாது.
என்னுடைய மாவட்டத்துல பள்ளிவாசல்களுக்கும் ஜமாத்துகளுக்கும் நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். என் அளவுக்கு முஸ்லீம்களுக்கு யாரும் செய்திருக்கவும் முடியாது. அப்படியிருக்கும் நிலையில, லோக்சபா தேர்தல்ல முஸ்லீம்கள் என்ன செஞ்சாங்க ? என் தொகுதியில் 8,500 வோட்டுகள் முஸ்லீம்களிடம் இருந்தும் அதிமுகவுக்கு வெறும் 23 வோட்டுதான் அவங்க போட்டிருக்காங்க. இதுதான் அவங்க நமக்கு காட்டுற நன்றியா ?
நாம என்னதான் அவங்களுக்கு நன்மை செய்தாலும், யாருக்கு வோட்டு போடணும்னு தெளிவா இருக்காங்க ! நாமதான் ஏமாந்துக்கிட்டு இருக்கோம். நீங்களோ முஸ்லீம்களை எதிர்த்தா தேர்தலில் வோட்டு பாதிக்கும்ங்கிறீங்க ? என்னைப் பொறுத்தவரைக்கும், அமைச்சர் என்பதை விட ஹிந்து என்பதை பெருமையா நினைக்கிறேன் ! ‘’ என ஆவேசமாகப் பேச , அதே வேகத்தில் அமைச்சர்கள் சிலர் பதில் சொல்ல, விவாதம் காரசார மோதலாக போவதை உணர்ந்து அமைச்சர்களை அமைதிப்படுத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !