இழப்பீடுகளின் மூலம் குற்றங்களை குறைத்துவிட முடியாது. இழப்பீடு வழங்கிவிட்டு தமது பணி முடிந்துவிட்டதாக தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்று தருவதன் மூலமே தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கொண்டு வர முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த சில நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் 15 வயது நிரம்பிய 10 ஆம் வகுப்பு மாணவியை அவருடன் படித்த 4 மாணவர்கள் உட்பட 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கட்டிடத் தொழிலாளியின் மகளான இவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இத்தகைய கொடூர வன்கொடுமை சம்பவங்களில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. ஆனால், பெரும்பாலான வழக்குகளில் தண்டனை வழங்கப்படாமல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிற அவலமும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துகிற வகையில் இது குறித்த சட்டப்பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்கிற சூழலை உருவாக்க வேண்டும்.
எனவே, ஆவுடையார் கோவில் சிறுமி பாலியல் பலாத்காரம் படுகொலைக்கு ஆளான குடும்பத்திற்கு தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கியிருக்கிறது. இத்தகைய இழப்பீடுகளின் மூலம் குற்றங்களை குறைத்துவிட முடியாது. இழப்பீடு வழங்கிவிட்டு தமது பணி முடிந்துவிட்டதாக தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்று தருவதன் மூலமே தமிழகத்தில் பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகளை முடிவுக்கொண்டு வர முடியும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.