சாத்தான் குளம் காவல் துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸின் மரணம் தேசத்தையே உலுக்கி எடுத்தது. அனைத்து தரப்பினரும் இந்த படுகொலையை கண்டித்திருந்தனர். அந்த வகையில், ஜெயராஜ், பென்னிக்ஸின் மரணம் குறித்து அண்மையில் கண்டன அறிக்கை வாசித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.
அப்போது ஜெயராஜ் நாடார் என்றும் பென்னிக்ஸ் நாடார் என்றும் அவர்கள் சார்ந்த சாதியை இணைத்து சொல்லியிருந்தார். இப்படி அவர் குறிப்பிட்டதை பல தரப்பினரும் விமர்சனம் செய்திருந்தனர், சர்ச்சைகளும் வெடித்தது. இந்த நிலையில், கே.எஸ். அழகிரிக்கு ஆதரவாக ட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா!
அதில், ' ராஜா சர் முத்தையா செட்டியார், வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஷிவ் நாடார் ஆகியோரை இந்த சமூகம் எப்படி அழைத்ததோ, அப்படித்தான் ஜெயராஜ் நாடாரும் அழைக்கப்பட்டார். அதனால்தான் தலைவர் அழகிரி அறிக்கையில் அவர் பெயர் அப்படி குறிப்பிடப்பட்டது' என கூறியிருக்கிறார் கோபண்ணா.
அழகிரிக்கு ஆதரவான அந்த ட்வீட்டுக்கு பதிலடி தரும் வகையில் ட்வீட் செய்துள்ள சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், 'இது முழுக்கு முழுக்க அபத்தமான ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம். காலம் மாறிவிட்டது. 21-ஆம் நூற்றாண்டில் சாதி அடையாளங்களுக்கு இடமில்லை. காங்கிரஸ் கட்சியின் அறிக்கையில் அதற்கு இடம் கிடையாது. சாதி என்பது இந்தியாவின் சாபக்கேடு. சாதி அடையாளங்களை நான் வன்மையாக எதிர்க்கிறேன் ' என பதிவிட்டிருக்கிறார்.
இந்த மல்லுக்கட்டு காங்கிரஸில் பரபரப்பாகி வருகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரியை கொண்டு வந்ததே ப.சிதம்பரம்தான். அவரது ஆதரவாளரான அழகிரியை ப.சி.யின் மகன் கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்ச்சித்திருப்பது காங்கிரஸின் உள்கட்சி மோதலை அம்பலப்படுத்துவதாக இருக்கிறது என்கிறார்கள் கதர்சட்டையினர்.