தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணைய வழியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ''மத்திய அரசு 50% முதல் 83% வரை விவசாய உற்பத்தி பொருட்களுக்கு விலை உயர்த்தப்படுவதாக அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக ஊடகங்களில் அறிவித்தது. ஆனால் அதுகுறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கையில் நெல் குவிண்டால் 1க்கு ரூ 53 விலையை உயர்த்தி உள்ளதாக அறிவித்து விவசாயிகளை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே உற்பத்தி சிலவை கணக்கிட்டு அதில் 50% கூடுதல் விலையாக உயர்த்தி நிர்ணயம் செய்திட வேண்டும். குறைந்தபட்சம் ரூ 2500 விலை அறிவித்திட முன்வர வேண்டும்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு 2020 புதிய மின்சார சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் மின் துறையை தனியாரிடம் விற்பனை செய்துள்ளதாகவும், அதன்படி விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை உரிமம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை தானே செலுத்தி விட்டு தமிழக அரசிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசு செலுத்த வேண்டும். அதற்கான ஒப்புதலை தான் கேட்டுள்ளோமே தவிர இலவச மின்சாரத்தை ரத்து செய்யவில்லை என்று விளக்கமளிப்பது போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்துவதாகும்.
இதனை கண்டித்தும், இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை அழிக்கும் நோக்கோடு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுத்தப்படும் மேட்டூர் அணை - சரபங்கா உபரி நீர் திட்டத்தை கைவிட கோரியும் வரும் ஜூன் 5ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரியிருந்தோம்.
அதற்கு 144 தடையுத்தரவு தொடர்வதை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்து விட்டதால் அதே தினத்தில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்கள் வீடுகள் அல்லது விளை நிலங்கள் மற்றும் சங்க அலுவலகங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.