நாகாலாந்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முக்கிய அறிவிப்புகள் சிலவற்றையும் அறிவித்துள்ளார்.
மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை கடந்த 18-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27-ம் தேதியும், திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் பிரிவு மற்றும் 126-ன் படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் அண்மையில் தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், நாகாலாந்தில் பாஜகாவின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்காக அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாகாலாந்து வந்திருந்தார். திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய நட்டாவிற்கு நாகாலாந்து மாநில பாஜக தலைவர் டெம்ஜென் இம்னா உற்சாக வரவேற்பளித்தார். மேலும், நட்டாவை வரவேற்க பாஜக மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
நாகாலாந்து தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேர்தல் அறிக்கையை ஜே.பி.நட்டா வெளியிட்டார். இதன் பின் பேசிய அவர், நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்றும், சிறப்பிடம் பெறும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.