அதிமுக - பாஜக இடையே சமீபகாலமாக வார்த்தை போர் நிலவி வருகிறது. அத்தோடு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பாஜகவினரை மேலும் கோபப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறி அதிமுக செயல்பட்டு வருவதாகக் கூறி பாஜகவினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என அதிமுகவை அண்ணாமலை கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து இரு கட்சியினரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் இடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணி கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பாஜகவுடனான கூட்டணி தொடரும் என அதிமுக தெரிவித்தது. மேலும், அதிமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் பாஜகவையோ அண்ணாமலையையோ விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழக பாஜகவினருக்கும் கண்டீஷன் போட்டுள்ளாராம். பாஜக அலுவலகம் திறப்பதற்காக கடந்த 10 ஆம் தேதி தமிழகம் வந்த ஜே.பி.நட்டா, அதிமுக குறித்தோ எடப்பாடி பழனிசாமி குறித்தோ யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தமிழக பாஜக நிர்வாகிகளும் தொண்டர்களும் பின்பற்ற வேண்டும். மீறினால் கட்சி நடவடிக்கை பாயும் என அறிவுறுத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.