தி.மு.க., காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவரின் தேர்தலுக்காக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி இன்று காலை தமிழகம் வந்தார்.
அதைத் தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த அவருக்கு தி.மு.க தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை நேரில் சந்தித்து குடியரசுத் தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். நிறைவாகப் பேசிய அவர், ”தற்போது மிக முக்கியமான தேர்தலைச் சந்திக்க உள்ளோம். இதில் என்னை நம்பி வேட்பாளராக நிறுத்திய உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, எனக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தற்போதைய சூழ்நிலையில் நாடு வேறு பாதையில் பயணித்து வருகிறது. ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும், ஆனால் தற்போது அப்படி இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இதைச் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு இந்த தேர்தலை ஒரு ஆயுதமாக நாம் பயன்படுத்துவோம்" என்றார். இதற்கிடையே திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அவர் வெற்றி பெறுவதற்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.