சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம் என ஜெயலலிதா தான் சொன்னார் என சசிகலா கூறியுள்ளார்.
சசிகலா இன்று கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதாவிற்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனது. கடைசியாக மெட்ரோ திறப்பு விழாவில் கலந்து கொண்டார். நாங்கள் யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. வழக்கில் தீர்ப்பு வந்து நான் பெங்களூர் செல்ல வேண்டிய சமயத்தில் கூட அதிமுகவை ஆட்சியில் இருக்க வைக்க வேண்டும் எண்ணத்தில் தான் நான் அதற்கான வழிகளை செய்துவிட்டு சென்றேன். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று மீண்டும் தைரியமாக கூறுகிறேன்.
ஜெயலலிதா இறப்பு குறித்த ஆறுமுகசாமி விசாரணைக்கு பதில் அளிக்க மூன்று தெரிவுகளை கொடுத்தனர். அது நேரில் வந்து சொல்வது, வக்கீல் மூலம் சொல்வது, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பது. இதில் நான் மூன்றாவது முறையை தேர்வு செய்தேன். அவர்கள் கேட்ட அத்தனைக்கும் பதில் அளித்தேன்.
வெளிநாடுகளில் இருந்து வந்த மருத்துவர்கள் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து செல்வது குறித்து நேரடியாக அவரிடமே கேட்டார்கள். ஆனால், ஜெயலலிதா வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். சென்னையில் இல்லாத சிகிச்சை முறைகளே இல்லை. அதனால் வெளியில் இருந்து மருத்துவர்களை இங்கே கூப்பிடலாம் எனச் சொன்னார். டிசம்பர் 19 ஜெயலலிதாவை வீட்டிற்கு அழைத்து கொண்டு போக திட்டமிட்டிருந்தோம். மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பரிசு கொடுக்க அவர் திட்டமிட்டிருந்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. எதிர்க்கட்சி என்பதால் மட்டுமே எதற்கெடுத்தாலும் திட்டுவதில்லை. என் அறிக்கைகளை பார்த்தாலே தெரியும். அறிவுப்பூர்வமான விஷயங்களை மட்டுமே கூறி வருகிறேன். நான் நேரடியாக அமைச்சராக எம்.எல்.ஏவாக இல்லை என்றாலும் கூட 24 மணி நேரமும் மக்களை பற்றி தான் சிந்திக்கிறேன். ஜெயலலிதாவுடன் இருந்து ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். நாங்கள் இருவரும் அதிகம் பேசியுள்ளோம். அதை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்துள்ளோம்.
அனைவரையும் ஒன்று சேர்த்து அனைவரிடமும் விவாதித்து பெருவாரியான முடிவு என்னவோ அதை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் பயன்படுத்துவோம். அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது எனச் சொல்கிறார்கள். யாரையும் யாரும் விழுங்க முடியாது” எனக் கூறினார்.