சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலர் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு இன்று (18.02.2023) அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில், "திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பதும், அதே போல் உடலை வருத்திக் கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோருவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை பத்திரிகை நிருபர்கள் தான் காப்பாற்றினார்கள். பத்திரிகை நிருபர்கள் இல்லை என்றால் அவர் இறந்து இருப்பார். காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றனர். மனு அளிக்க வந்த அவர் மனுவைக் கொடுத்து விட்டு போகட்டும். அது அவரது உரிமை, அவரது பிரச்சனை. மாவட்ட ஆட்சியரை உடனடியாக சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவரை பத்திரிகையாளர்களிடம் பேச விடாமல் செய்கின்றனர். கருத்துச் சுதந்திரம் இல்லை.
முதலமைச்சர் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளைத் தந்துவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறுகிறார். ஒரு கார்டு தருகிறேன். நேராக என்னுடைய முதலமைச்சர் அறைக்கு வந்து பார்க்கலாம் என்றார். யாராவது போய் பார்க்க முடியுமா? ஒருத்தரும் போய் பார்க்க முடியாது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர்கள் குதிரையில் போகிறார்கள். டீக்கடைக்குச் சென்று டீ போடுகிறார்கள், ஹோட்டலுக்கு சென்று ஆம்லேட் போடுகிறார்கள். வாக்காளரின் வீட்டிற்கு சென்று பாத்திரம் மட்டும் தான் தேய்க்கவில்லை. நாளையில் இருந்து நாங்களே பாத்திரங்களைத் தேய்த்து விடுகிறோம் என்று கூடச் சொல்வார்கள் " எனக் கூறினார்.