'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு உறுப்பினர்களை நியமித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திகுப்பம் பகுதியில் அதிமுக பிரமுகர் இல்ல நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கின்ற கொள்கையை வரவேற்கின்றனர். மேலும், 1967 ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என ஒரே நேரத்தில் நடத்திய தேர்தல் முறை மாறியது. அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. அதை பல்வேறு காலகட்டங்களில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதே போல், இன்றைக்கு ஒரே நேரத்தில் நடத்துவது என்பது காலத்தின் கட்டாயம். தற்போது பரிணாம வளர்ச்சி காலத்தின் கட்டாயத்தின்படி ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கிறோம். இதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணாவது தவிர்க்கப்படும். 1952 ஆம் ஆண்டில், ஒரு தேர்தல் நடத்துவதற்கு சுமார் 11 கோடி ரூபாய் செலவானது. ஆனால், தற்போது உள்ள நிலையில், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் தேர்தலுக்காக செலவாகும் சூழ்நிலை உள்ளது.
அந்த பணங்களை வைத்து மக்களுக்கு தேவையான பாலம், சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தலாம். ஓ.பன்னீர் செல்வம் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்தியில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். தமிழகத்தில் எங்கள் தலைமையில் பா.ஜ.க கூட்டணி உள்ளது. அண்ணாமலைக்கு கூட்டணியை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் இல்லை” என்று கூறினார்.