ஓபிஎஸ் வேண்டுமானால் புதிய கட்சியை துவங்கட்டும் எனக் கூறி அதற்கு பெயரையும் ஈபிஎஸ் ஆதரவாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு மந்திரி பதவியை தடுத்துவிட்டார்களாம். யாரும் தடுக்கவில்லை. ஆனால், நாங்கள் தடுத்தது போல மேடையில் செய்கைகளை செய்கிறார். கண்ணீர் கசிகிறது, நா தழுதழுக்கிறது. இதன் காரணமாகத் தான் திமுகவின் பி டீமாக செயல்படுகிறாரோ?
நாங்கள் எதற்கு தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும். நாங்கள் தான் கட்சி. இவர் வேண்டுமானால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் எனப் புதிதாக ஒன்றை ஆரம்பித்து அவரது பலத்தை அவர் காட்டட்டும். அவரது பலம் காட்டும் போது தெரியும். நாம் ஒருவர் நமக்கு நால்வர். நால்வர் அணி மாதிரி போட்டி அணிகள் இதற்கு முன் காணாமல் போயுள்ளன. அது போல் அந்த அணியும் காணாமல் போகும்.
ஓபிஎஸ்-க்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-ஐ கட்சிக்காரர்கள் யாரும் நீக்கவில்லை. அவரை நீக்கியது பொதுக்குழு. பொதுக்குழு அவரை நீக்கும் போது அவர் எப்படி கட்சிக்கு சம்பந்தப்பட்டவர் ஆவார். அவர் எப்படி கட்சிக் கொடியை உபயோகிக்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் அமையும். கட்சிகளுக்கு நாங்கள் கொடுப்பது தான் சீட். இதை விட யாரும் உறுதியாகச் சொல்லமாட்டார்கள்.” என்று கூறினார்.