
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் இடப்பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாஜகவுடனான பேச்சு வார்த்தை சுமுகமான முறையில் இருந்தது; பேச்சு வார்த்தைத் தொடர்ந்து நடைபெறும். ஒரு கட்சியாக அவர்கள், அவர்களுக்கு தேவையான இடங்கள் என பட்டியல் கொடுத்துள்ளனர்; தொடர்ச்சியான பேச்சு வார்த்தைக்கு பிறகு எந்தெந்த இடங்கள் கொடுப்பது என்பது இறுதி செய்யப்படும்.
கோரிக்கை என்பது அவர்களின் கடமை; ஒப்புதல் என்பது எங்களின் கடமை. கோரிக்கை எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், எங்களின் கட்சி நலன் எல்லாம் கருத்தில் கொண்டு அவை பாதிக்காத வகையில்தான் ஒப்புதல் அளிப்போம்” என்று தெரிவித்தார்.