ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடைக்கால மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து ஆறு மாதகால இடைவேளையில் அதே சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தடை மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவை 4 மாதம் 11 நாட்கள் கிடப்பில் வைத்திருந்த நிலையில் தமிழக அரசிடம் கூடுதலாக விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும் படி ஆளுநர் மாளிகை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு தடைச் சட்ட மசோதாவை அனுப்பியதில் இருந்து, தற்போது கூடுதல் விளக்கம் கேட்டு ஆளுநர் மீண்டும் அரசுக்கு அனுப்பிய இடைப்பட்ட 4 மாதம் 11 நாட்களில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆன்லைன் ரம்மியால் தற்போது வரை 44 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.
இந்நிலையில் எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட ஒப்புதல் மறுப்பு. திரும்பி அனுப்பினார் ஆளுநர். தமிழ்நாட்டு மக்களிடம் அவர் கட்சிக்காரர் சொல்வதையே அவரும் மீண்டும் சொல்கிறார். நான் இட்லி சுடவோ, தோசை சுடவோ தமிழ்நாட்டிற்கு வரவில்லை. மாநில உரிமையை சுடவே வந்துள்ளேன். உங்களால் என்ன செய்துவிட முடியும்?” எனக் கூறியுள்ளார்.