டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் 'முகலாய' தோட்டம் இருக்கிறது. இந்த தோட்டத்தின் பெயரை மாற்றி ‘அம்ரித் உதயன்’ என புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயர் மாற்ற நடவடிக்கையில் மத்திய மோடி அரசை கடுமையாக கண்டித்திருக்கிறார் மனித நேய கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயன் என்று மாற்றம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மற்றும் மேற்கத்திய கட்டடக் கலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டடம் போலவே, லுட்யென்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார். முகலாயர் பாணி கால்வாய்கள், மேற்தளங்கள், பூக்கள் அடர்ந்த புதர்கள் போன்றவை ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டது அந்தப் பூங்கா.
இந்தப் பெயர் மாற்றம் குறித்து அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியே வருவது மிகவும் அவசியமான ஒன்று. அதன்படி, அடிமை மனப்பான்மையிலிருந்து வெளியேறும் மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான மத அடிப்படைவாத செயலாகும். முகலாயர் என்ற பெயர் இருப்பதினாலேயே பெயர் மாற்றம் செய்வது என்பது ஒன்றிய அரசின் மத சகிப்பின்மையை வெளிப்படுத்தி இருக்கிறது. குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவன் என்பது கற்பனைக்கு உயிரூட்டக்கூடிய மற்றும் தலைசிறந்த கட்டடக் கலைஞர்களாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கருதப்பட்ட சர் எட்வின் லுட்யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரின் படைப்பாற்றலால் உருவாக்கப்பட்டது.
அவர்கள் கருத்துப்படி பார்த்தால் அந்த கட்டடத்திலேயே குடியரசுத் தலைவர் வசிக்கக் கூடாது. அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடு என்று கருதி குடியரசுத் தலைவர் அந்த மாளிகையை விட்டு வெளியேறி விடுவாரா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. நாட்டின் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பும் நோக்கில் அரசியல் ஆதாயத்திற்காக இதுபோன்ற முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் இதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றேன் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.