இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈஷா மையம் மீது நில ஆக்கிரமிப்பு வன விலங்குகள் வேட்டையாடுதல் என பல வழக்குகள் உள்ளது. சுபஸ்ரீ மரணத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “சுபஸ்ரீயின் மரணம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஈஷா யோகா மையம் என்ற நிறுவனம் அதை நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் என்கிற சாமியார் செல்வாக்கு மிக்கவர். ஆதியோகி சிலை திறப்பு விழாவில் நாட்டின் பிரதமர் கலந்து கொள்கிறார். அது சரியா தவறா என்பது வேறு பிரச்சனை. மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகளில் பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது.
கோவை காவல்துறை மற்ற சாதாரண நிறுவனத்தில் இது மாதிரி ஏதேனும் மரணம் நிகழ்ந்தால் அந்த வழக்கை எப்படி விசாரிக்குமோ அவ்வாறு ஈஷா மையத்தின் விசாரணையில் இல்லை. 18 ஆம் தேதி பெண்ணை காணவில்லை. 24ஆம் தேதி கணவர் பழனிகுமாரை சாமியார் அழைத்துப் பேசியுள்ளார். ருத்ராட்ச மாலை போட்டுள்ளார். இது குறித்து காவல்துறை விசாரித்துள்ளதா.
ஞாயிறன்று எந்த அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தார்கள். ஏன் அவ்வளவு அவசரமாகப் புத்தாண்டு தினத்தன்று பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன. பிரதமர் வந்தார். நட்டா வந்தார் என்றால் ஒரு நீதி. எதுவும் இல்லாதவருக்கு ஒரு நீதி. தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தால் என்ன? மோடி ஆட்சி நடந்தால் என்ன? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜக்கி வாசுதேவ் மத்திய அரசுடன் செல்வாக்காக இருக்கிறார்.
ஜக்கி வாசுதேவ் நடத்தும் நிறுவனத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மனைவியின் மரணமே மர்மமான முறையில் உள்ளது. காவல்துறை ஜக்கி வாசுதேவிடம் விசாரிக்க வேண்டும். இதில் தமிழக அரசு எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவின் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் சொல்லுவதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. நான் புலனாய்வு அதிகாரி இல்லை. ஊடகங்கள் கொடுத்த செய்திகளை வைத்து தான் கூறுகிறேன். நக்கீரன் இதழில் அது வெளிவந்துள்ளது. இதை முத்தரசன் சொல்கிறார் என்றே போடுங்கள். அவர் என் மீது வழக்கு பதியட்டும்” எனக் கூறினார்.