
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில் தற்போதைய அரசின் ஆயுட்காலம் பிப்ரவரி 18, 2023 உடன் முடிவடைகிறது. புதிய வாக்காளர்கள் 4.6 லட்சம் பேர் குஜராத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்காக மொத்தம் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் 1ம் தேதி முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் டிசம்பர் 5ல் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், மொத்தமுள்ள 182 தொகுதிகளிலும் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இப்பெயர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் மனைவி ரிவாபாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. ரிவாபா 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவருக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Jai hind 🇮🇳 pic.twitter.com/JWdbV0brab
— Ravindrasinh jadeja (@imjadeja) November 10, 2022
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் தனது மனைவிக்கு ரவீந்திர ஜடேஜா வாழ்த்துக் கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது, “பாஜக சார்பாக போட்டியிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது மனைவிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உழைக்கவும் எனது வாழ்த்துகள். மனைவியின் திறமை மீது நம்பிக்கை வைத்து உன்னதமான செயல்களைச் செய்ய வாய்ப்பளித்த மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா அவர்களுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.