முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நடந்த அதிமுக கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2021 தேர்தல் நடந்தது. ஓபிஎஸ் அதிலும் சூழ்ச்சி செய்தார். தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். நமக்கு துணை முதல்வர் பதவியை தான் கொடுப்பார்கள் என்றெண்ணி தேனி மாவட்டத்திலேயே இவரைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை. எப்படிப்பட்ட சந்தர்ப்பவாதி இவர்” என குற்றம் சுமத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசினை பொறுத்தவரை ஆறுமுகசாமி அறிக்கையினை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கட்சியில் இருக்கும் விஜயபாஸ்கரை பொறுத்தவரை பாலிஸி டிசிசனை அவர் எடுக்க முடியாது. பாலிஸி டிசிசன் முதல்வரால்தான் எடுக்க முடியும். அனைவருமே முதல்வருக்கு கட்டுப்பட்டவர்கள் தானே. அன்றைக்கு அதிகாரம் கொண்டிருந்தவர் சசிகலா தான்.
அதே போல் சசிகலா யாரையும் சந்திக்க விடவில்லை. நாங்களும் போய் பார்த்தது கிடையாது. 10 அறைகள் எடுத்து முழுக்க முழுக்க அவரின் உறவினர்கள் தான் அப்பல்லோ மருத்துவமனைகளை ஆக்கிரமித்தார்களே ஒழிய வேறு யாரையும் போய் பார்க்க விடவில்லை. ஆறுமுகசாமி ஆணையம் கொடுத்த அறிக்கையில் அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.