
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்தாண்டு அக்டோபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக, உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தர்ம்ராஜ் ராஜேஷ் காஷ்யப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உடைய கூட்டாளிகள் என தெரியவந்தது. மேலும், பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு கொலை குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய், எல்லை தாண்டிய போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது பாபா சித்திக் கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது, சிறையில் தொலைபேசி வசதி உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகள் கிடைத்ததா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சீன் மூத்த தலைவர் பாபா சித்திக் மகனான ஜீஷான் சித்திக்கிற்கு தற்போது மின்னஞ்சல் மூல கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலில், ரூ.10 கோடி தர வேண்டும் இல்லையெனில் உன் தந்தையைப் போலவே கொலை செய்யப்படுவாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீஷான் சித்திக், ‘டி நிறுவனத்திடமிருந்து எனக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. அதில், அவர்கள் ரூ.10 கோடி தொகையை கோரினர். போலீசார் விவரங்களை எடுத்துக்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். இதனால் எங்கள் குடும்பம் கலக்கமடைந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.