வேலூர், காகிதப் பட்டறை ஆற்காடு சாலையில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், சேலம் செவ்வாய்பேட்டையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதான இளைஞர் ஒருவரை வேலூர் இல்லத்திலிருந்து சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை இடம் மாற்றக் கூடாது என்று கூறியும் இங்கேயே வைத்திருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பாதுகாப்பு இல்லத்தின் வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மீது ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பாதுகாப்பு இல்லத்தில் வேலூர் வடக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் தொடர்ந்து 3 1/2 மணி நேரமாக அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர் கீழே இறங்கவில்லை.
சம்பவ இடத்துக்கு நீதிபதி வரவேண்டும் என அந்த இளைஞர் கோரிக்கை வைத்தார். நீதிபதிக்கு இந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் இளஞ்சிறார் நீதித்துறை நீதி குழும நீதிபதி பத்மகுமாரி, அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து சுமார் 3 1/2 மணி நேரம் கழித்து அந்த இளைஞர் கீழே இறங்கி வந்தார். இதனையடுத்து நீதிபதி இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இளைஞரின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.