Skip to main content

“அவருடைய பதவிக்கு அது அழகல்ல...” - டி.டி.வி. தினகரன் பேட்டி

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

'It is not attractive for his position...'-TTV Dinakaran interview

 

ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டத் திருத்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்குத் தமிழக அரசு சார்பிலும் பதில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி நேற்றுடன் காலாவதியானது.

 

இதுகுறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டி.டி.வி.தினகரன்,

 

''இது ரொம்ப துரதிருஷ்டவசமானது. ஆளுநர் தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதிக் கையெழுத்திடாமல், அரசு கொண்டு வருகின்ற சட்டங்களைக் காலம் தாழ்த்தி காலாவதியாகும் அளவுக்குக் கொண்டு செல்வது அவருடைய பதவிக்கு அது அழகல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் ஆளுநர் சரி செய்ய வேண்டும். எந்த ஆட்சிக் காலத்தில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் மக்கள் நலனுக்கான திட்டங்கள், சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருகின்ற பொழுது காலம் தாழ்த்தாமல் ஆளுநர் உடனுக்குடன் கையெழுத்திடுவது தான் மரபு.

 

ஏற்கனவே உச்சநீதிமன்றமே ஆளுநர் காலம் தாழ்த்தியதற்கும் சில விஷயங்களைக் கிடப்பில் போட்டதற்கும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் ஆளுநர் கவனமாகச் செயல்பட வேண்டும். விமர்சனத்திற்கு ஆளாகாமல் செயல்படுவதுதான் ஆளுநருக்கு அழகாக இருக்கும்.'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்