“இதற்கு முன் பெறு வெற்றி பெற்ற காங்கிரஸ் ஒற்றை இலக்க இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் மனம் வலிக்கிறது. காங்கிரசின் இழப்பு என்பது யாரும் எதிர்பாராத அளவில் இருக்கிறது” எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், “டெல்லியைப் பொறுத்தவரை காங்கிரசின் ஓட்டு ஆம் ஆத்மிக்கு போகிறது. காங்கிரசின் ஓட்டு பாஜகவிற்கு வராது. கருத்தியல் ரீதியாக இரண்டும் எதிரான கட்சி. காங்கிரசின் ஓட்டுகள் ஆம் ஆத்மிக்கு சென்றதுதான் 2020ல் ஆம் ஆத்மி பெற்ற சரித்திர வெற்றி.
ஆம் ஆத்மியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் காங்கிரசின் வாக்குகளை காங்கிரஸ் தக்கவைக்கத் தவறியதால் தான். குஜராத்தில் காங்கிரஸ் மிக வேகமாக வீழ்ச்சியுற்று வருகிறது. 1995 வரை காங்கிரஸ் தான் வெற்றி பெற்று வந்துள்ளது. ஆனால் இன்று ஒற்றை இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தால் மனம் வலிக்கிறது. காங்கிரசின் இழப்பு என்பது யாரும் எதிர்பாராத அளவில் இருக்கிறது. காங்கிரஸ் காணாமல் போய்க்கொண்டு இருப்பதற்கு இவை அனைத்தும் உதாரணம்.
திமுக கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சிக்கு வரவில்லை. திமுக வெற்றி பெற்ற தேர்தலை விட தோல்வி அடைந்தது அதிகம். பொறுமை அவசியம். சந்தர்ப்பத்திற்கு காத்திருக்க வேண்டும். ஒரு வார்த்தை பேசினால் அரசியலில் அந்த வார்த்தையை மீண்டும் எடுக்க முடியாது. ஒரு தலைவரைப் பற்றி ஒரு கருத்து தவறாகச் சொல்லிவிட்டால் அது உடைந்து போன கண்ணாடி மாதிரி. மீண்டும் ஒட்டி வைத்தாலும் கூட அந்தக் காயம் அதில் இருக்கும். இளைஞர்களுக்குச் சொல்லுவதெல்லாம் பொறுமையாக இருங்கள் என்பதுதான்” எனக் கூறினார்.