எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அய்யாவும், சின்ன அய்யாவும் மணி அடிக்கும் பூசாரிகளாகிவிட்டனர் என்று சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
மறைந்த திமுக தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூரில் தேர்தல் பரப்புரையை நேற்று முன்தினம் தொடங்கி, அவர் வளர்ந்த தஞ்சையில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து, நேற்று பெரம்பலூரிலும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, 'இந்த நாடும் நமதே, நாற்பதும் நமதே' என்ற முழக்கத்தோடு இன்று மூன்றாவது நாளாக சேலத்திற்கு வந்திருக்கிறேன்.
செல்லும் இடங்களில் எல்லாம் அலைகடலென மக்கள் திரண்டு வருவதைப் பார்க்கும்போது நிச்சயமாக வரும் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்பது தெளிவாகிறது. இங்கே கூடியுள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; மத்தியில் உள்ள பாஜக மீதும், மாநிலத்தில் ஆளும் அதிமுக மீதும் ஏற்பட்டுள்ள வெறுப்பையும் காட்டுகிறது.
இன்றைக்கு ஆட்சியில் உள்ள அதிமுக ஏதாவது சாதனைகள் செய்திருப்பதாக சொல்ல முடியுமா? கொடநாடு கொலை, கொள்ளை, அமைச்சர்கள் முதல் டிஜிபி வரை குட்கா ஊழல் புகார், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது, ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது திராவகம் வீசியது என பல வேதனைகளைத்தான் இந்த அரசு கொடுத்திருக்கிறது.
ஜெயலலிதா அம்மையார் ஓய்வு எடுக்க ஊட்டி கொடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்குச் செல்வதுண்டு. அதிமுக அமைச்சர்கள் பலர் சொத்துக்குவித்துள்ள ஆதாரங்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்து வைத்திருந்தார். முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார். அந்த பங்களாவில் அவர் 2,000 கோடி ரூபாய் வைத்திருந்தார். அவற்றையெல்லாம் கொள்ளை அடிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையை அனுப்பி வைத்தார்.
கொள்ளையை தடுக்க முற்பட்ட கொடநாடு பங்களாவின் காவலாளி கொல்லப்படுகிறார். அதன்பின் தொடர்ச்சியாக மேலும் நான்கு பேர் உள்ள 5 பேர் கொல்லப்படுகின்றனர். யாரை வைத்து எடப்பாடி பழனிசாமி இந்த காரியங்களை செய்தாரோ அவரே இதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த சயன் என்பவர் தலைமையில் சென்ற கும்பல்தான் கொடநாட்டில் கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்டது. சயனும் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்பு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மூலம்தான் இந்த வேலைகளை எடப்பாடி பழனிசாமி செய்து முடித்ததாக சயன் தெரிவித்துள்ளார். எடப்பாடி சொன்னதன்பேரில் கனகராஜ், சயனிடம் 5 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். உண்மைகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சயன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது திட்டமிட்டு விபத்து மூலம் அவரை கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. அதில் சயன் தப்பித்து விட்டாலும், அவருடைய மனைவியும், குழந்தையும் உயிரிழந்து விட்டனர். கனகராஜூம் மர்மமான முறையில் இறந்து விட்டார். கனகராஜ் மரணத்திலும் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய அண்ணன் தனபால் பேட்டி அளித்திருக்கிறார். இத்தனைக்கும் தனபாலும் அதிமுககாரர்தான்.
சயன் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், இதுவரை எடப்பாடி பழனிசாமி அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்காதது ஏன்? கனகராஜின் சாவுக்கு எடப்பாடிதான் காரணம் எனக்கூறிய போதும் அவர் மீது ஏன் எடப்பாடி வழக்கு போடாமல் இருக்கிறார்? அதனால்தான் அவர் மீது எல்லோருக்கும் சந்தேகம் வலுக்கிறது. விரைவில் இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சி அமையும். அப்போது கொடநாடு கொள்ளை, கொலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். நிச்சயமாக எடப்பாடி சிறைக்கு செல்வார். சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்படும்.
துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது ஸ்மார்ட் சிட்டி ஊழல் புகார், அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி ஊழல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், முட்டை ஊழல் என இந்த எடப்பாடி அரசில் கிரிமினல் கேபினட்தான் அமைந்திருக்கிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்றுதான் இந்த ஆட்சி செயல்படுகிறது.
இதையெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியிடம் புகார் சொல்லலாம் என்றால் அவர் மீது பாலியல் புகார் இருக்கிறது; அவருக்கு மேல் உள்ள டிஜிபியிடம் சொல்லலாம் என்றால் அவர் மீது குட்கா ஊழல் புகார் உள்ளது. ஆளுநரிடம் புகார் சொல்லலாம் என்றால் அவரோ நிர்மலாதேவி புகாரில் சிக்கியிருக்கிறார். இவர்கள் இப்படி என்று, மோடியிடம் சொல்லலாம் என்றால் அவரும் ரபேல் ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார். மோடியும், எடப்பாடியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அவர்களுடன் இப்போது மூன்றாவதாக ஒரு பெரிய அய்யா சேர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடமாக ஆளும் கட்சியைப் பார்த்து நாம் கூட அப்படி திட்டியது கிடையாது. அந்தளவுக்கு கேவலமாக திட்டோ திட்டு என்று திட்டிவிட்டு, இப்போது கூட்டணி சேர்ந்திருக்கிறார். ஏனென்றால் அந்த அய்யா, அவர்களிடம் கேட்ட சீட்டு மட்டும் அல்ல, 'கேட்டது எல்லாம்' கிடைத்திருக்கிறது.
இந்த பெரிய அய்யாதான், அம்மையார் ஜெயலலிதா பற்றி, அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி, அம்மையார் கொள்ளையடித்தது பற்றி தொகுத்து 'அதிமுகவின் கதை' என்று புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தில் ஓரிடத்தில், 'தான் கொள்ளை அடித்தது எல்லாவற்றையும் ஒரு முதலீடாக வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.
கடவுள் இல்லை என்று சொன்ன முதல்வரை பார்த்து இருக்கிறோம். கடவுள் உண்டு என்ற முதல்வரையும் பார்த்து இருக்கிறோம். ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு முதல்வர் எடப்பாடி பழனிசாமி,' என்று சொன்னதும் நான் அல்ல; அந்த பெரிய அய்யாதான். இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மணி அடிக்கும் பூசாரிகளாக பெரிய அய்யாவும், சின்ன அய்யாவும் சேர்ந்துள்ளனர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
பின்னர் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். முன்னதாக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வாக்கு கேட்டு பேசினார். இக்கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.