பணிக்காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இந்நிகழ்விற்கு பிறகு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என் வீட்டில் இருந்து வரும் பொழுது அதிகமான இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழ் தாய் விருது வழங்கும் விழா என்று போடப்பட்டுள்ளது. அதற்கு கீழே ‘மாநில தலைவர்’ என்று போடப்பட்டுள்ளது. மாநிலத் தலைவரில் ‘த்’ என்ற ஒற்றெழுத்து போடவில்லை. இவர்கள் தமிழ் தாய் விருது கொடுக்கின்றேன் எனச் சொல்லுகிறார்கள். ஏதோ இன்று அவர்கள் தமிழகத்தில் காலூன்ற வேண்டும்; வளர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு இது எல்லாம் செய்ய வேண்டியதுள்ளது. அண்ணாமலை ஒரு அதிகாரி. அவர் சிறுவயதில் இருந்து அரசியல் செய்து பக்குவப்பட்டு வரவில்லை.
நாங்கள் சிறுவயதில் இருந்தே திராவிடர் கழகங்கள், பெரியாரிய இயக்கம், அம்பேத்கரிய இயக்கம், மார்க்சிய சிந்தனைகள் ஊறி பல்வேறு அரசியல் இயக்கங்களில் இருந்து வளர்ந்தவர்கள். அவர் நேரடியாகவே அதிகாரியாக இருந்து இந்தப் பொறுப்பிற்கு வந்துள்ளார். அதனால் யாரை எப்படி அனுசரித்துப் பேச வேண்டும் என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களில் அந்தப் பக்குவத்தை அவர் பெறுவார். இதைப் பெரிது பண்ண வேண்டாம்.
ஈஷா காடுகளை ஆக்கிரமித்தது. இவ்வளவு பெரிய இடத்தை எடுத்துக் கொடுத்ததற்கு இந்த அரசுகளுக்கும் தானே பொறுப்பு உள்ளது. அதை எப்படி விட்டீர்கள். 500 கோடி ரூபாய் பணம் கண்டெய்னரில் பிடித்தார்களே. அது யாருடைய பணம் என யாராவது விசாரித்தார்களா. அந்தப் பணம் யாருக்குச் சென்றது; எங்கிருந்து சென்றது; ஏன் அதைத் தொடவில்லை? இதற்கு அம்பேத்கர் சொன்ன ‘அதிகாரம் மிக வலிமையானது’ என்ற வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.” எனக் கூறினார்.