திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ம.தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரை வைகோ களமிறங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போராடி வேட்பாளராக கருப்பையாவிற்கு சீட் வாங்கி விட்டார். மற்றொரு பக்கம் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க. களமிறங்கி உள்ளது.
இதையெல்லாம் கடந்து புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களை பொதுவெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கும் விதமாக கிராமங்கள் தோறும் கிராமாலாயா தொண்டு நிறுவனம் மூலம் தனி நபர் கழிவறைகள், பள்ளிகளுக்கான கழிவறைகள் கட்டிக் கொடுத்து முழு சுகாதார கிராமங்களை கண்டதால் கடந்த 2022 ல் பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமாலாயா தொண்டு நிறுவன நிறுவனர் தாமோதரன் வேறு சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். திருச்சி தொகுதிக்கான போட்டி கடுமையாக இருக்கும் பட்சத்தில் நான் வாங்கிக் கொடுத்த சீட்டில் கருப்பையாவை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று சில தேர்தல் வியூக ஏஜென்சிகளின் உதவியுடன் தேர்தல் பணிகளை விஜயபாஸ்கர் முடுக்கிவிட்டுள்ளார். மேலும் வழக்கம் போல தொண்டர்கள் துவண்டுவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி அவர்களை பார்த்து உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய் கிழமை திருச்சி தொகுதிக்கான புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிமனைக்கு அ.தி.மு.க. நகர நிர்வாகிகள், வட்டச் செயலாளர்களை அழைத்து வழக்கம் போல உற்சாக பேச்சுகளை அவிழ்த்து விட்டார் தொடர்ந்து எந்த தொகுதியில் தி.மு.க.வை விட அதிக ஓட்டு வாங்கி கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார் பரிசு வழங்கப்படும். அதற்குள் தேர்தல் கட்டுப்பாடுகள் முடிந்துவிடும். அதே போல அ.தி.மு.க வட்டச் செயலாளர் தி.மு.க.வுக்கு ஒரு ஓட்டு கூட வாங்காமல், அ.தி.மு.க.வுக்கு வாங்கி கொடுத்தால் 5 பவுன் தங்கச் சங்கிலி நான் போடுகிறேன். ஏற்கெனவே தங்க மோதிரம் வாங்கி இருக்கிறார்கள். அதே போல இந்த தேர்தலிலும் அதிக ஓட்டு வாங்கினால், தங்க சங்கிலி பரிசு. இடையில் ஒருவர் குறுக்கிட்டு அப்ப தெற்கு மாவட்டத்திற்கு என்று கேள்வி எழுப்ப, தெற்கு - வடக்கு இரு பக்கமும் தலா 5 பவுன் போடுகிறேன். வேட்பாளரிடமும் சொல்லிடுறேன். இப்பவே களப்பணியை தீவிரமா செய்ங்க என்று உற்சாகப்படுத்தி அனுப்பினார்.