இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாவட்ட பொதுக்குழு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியதாவது; சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விடம் திருச்சி கிழக்குத் தொகுதியைக் கேட்பது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைமை பொதுக் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தி.மு.க.வுடன் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்திருக்கிறது. சீட்டுக்காகக் கூட்டணி இல்லை. கேட்ட சீட்டு கிடைக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து விலகமாட்டோம். அவர்களும், விடவும் மாட்டார்கள்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது மற்ற மாணவர்களின் சம வாய்ப்பைப் பறிப்பது போன்றது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவப் படிப்பில் சேர்ந்து பணம் கட்ட முடியாமல் இருக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவ வேண்டும். உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தை தற்போது தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது.
உதயநிதியின் தேர்தல் பிரச்சாரத்தை தடுப்பது தி.மு.க.விற்கு, மக்களிடையே ஆதரவை அதிகரிக்கும். பீகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தான் காரணம் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. உள்துறை அமைச்சர் தமிழக வருகையால் எதிர்க்கட்சிகளுக்கு எந்தப் பயமுமில்லை எனத் தெரிவித்தார்.