இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் இறுதி மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று (30.05.2024) மாலை 5 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையும் முடிந்துள்ளது. மேலும் ஜூன் நான்காம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பிரசாரத்தின் கடைசி நாளான இன்று, நாட்டின் மகத்தான மக்களுக்கு வணக்கம் செலுத்தும் வேளையில், இந்திய அரசு அமையப் போகிறது என்பதை, காங்கிரஸின் தொண்டர்களுக்கு நான் நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். நாட்டின் அரசியல் சாசனம் மற்றும் அதன் அமைப்புகளைக் காப்பாற்ற சளைக்காமல் துணை நின்ற கூட்டணிக் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் குரலை உயர்த்தினோம்.
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கும் மற்றும் ஒவ்வொரு மூலையிலும் எங்கள் செய்தியை எடுத்துச் செல்லும் மாற்றுப் பார்வையின் வடிவத்தில் புரட்சிகர உத்தரவாதங்களை நாட்டிற்கு நாங்கள் ஒன்றாக முன்வைத்தோம். கடைசி நேரம் வரை வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள அறைகளைக் கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்தியா ஜெயிக்கப் போகிறது” எனத் தெரிவித்துள்ளார்.