பொதுமக்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசாக திங்கட்கிழமை காலை முதல் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00 ரூபாய் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளன. தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனங்களும், தமிழகத்தைச் சார்ந்த தனியார் பால் நிறுவனங்களும் பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் மூன்று முறை (பிப்ரவரி, ஜுன் மற்றும் செப்டம்பர்) லிட்டருக்கு 8.00ரூபாய் வரை பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை உயர்த்தின.

இந்நிலையில் மகராஷ்ட்ராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி தனியார் பால் நிறுவனமான ‘பராக் டெய்ரி” நிறுவனம் பால் கொள்முதல் விலை உயர்வு என்கிற காரணத்தை சுட்டிக் காட்டி கடந்த 12.01.2020 முதல் தங்களது பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரை சத்தமின்றி உயர்த்தியது.
பராக் டெய்ரி நிறுவனத்தின் விற்பனை விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது ஹெரிடேஜ், ஆரோக்யா, டோட்லா மற்றும் ளுமுயு டெய்ரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்கிற காரணத்தைக் கூறி வரும் 20.01.2020 முதல் தங்களது பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 4.00ரூபாய் வரை உயர்த்துவாக சுற்றறிக்கை மூலம் பால் முகவர்களுக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்களைத் தொடர்ந்து இதர அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை வரும் வாரத்தில் உயர்த்திட முடிவு செய்துள்ளன.
பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தைக் கூறி கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 8.00ரூபாய் வரை உயர்த்திய தனியர் பால் நிறுவனங்கள் தற்போது தமிழகத்தில் பால் தட்டுப்பாடு என்கிற புது காரணம் கூறி 2020ம் ஆண்டின் துவக்கத்திலேயே பால் விற்பனை விலையை உயர்த்த தொடங்கியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தமிழகத்தில் சுமார் 83.4மூ பால் தேவைகளுக்கு பொதுமக்களும், தேனீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் தனியார் பால் நிறுவனங்களையே சார்ந்திருப்பதால் இந்த தன்னிச்சையான தொடர் பால் விற்பனை விலை உயர்வின் காரணமாக ‘தேனீர், காபி உள்ளிட்ட பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விற்பனை விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 1.5 கோடி லிட்டர் பால் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை ஆவின் நிறுவனத்தின் சார்பில் பூர்த்தி செய்திட உரிய நடவடிக்கை எடுக்காமலும், பொய்யான காரணங்களை கூறி பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் ஆண்டுக்கு மூன்று, நான்கு முறை பால் விற்பனை விலையை உர்த்துவதோடு, அந்நிறுவனங்களின் பால் விற்பனை வீழ்ச்சியடையும் போதெல்லாம் பால் கொள்முதல் விலையை குறைத்து பால் உற்பத்தியாளர்களை நஷ்டப்பட வைப்பதையுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விற்பனை விலையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தமிழக அரசு அமைதியாக இருப்பதை காண்கையில் அரசும், துறை சார்ந்த அமைச்சரும் தனியார் பால் நிறுவனங்களோடு மறைமுக ஒப்பந்தத்தில் இருக்கின்றனரோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.

உயிரைக் குடிக்கும் மதுவெனும் விஷத்தை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்ய இலக்கு வைத்து செயல்படும் தமிழக அரசு உயிர் காக்கும் அத்தியவசியப் பொருளான பால் விற்பனையை ஆவின் மூலம் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே மேற்கண்ட தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வருங்காலங்களில் அரசு அனுமதி இன்றி பால் விற்பனை விலையை உயர்த்திட தடை விதித்து உத்தரவிடுமாறு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.