தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் வீடு உள்ளிட்ட இடங்களில், துணை ராணுவப்படையின் பாதுகாப்புடன் தற்பொழுது வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க. தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை. இது பா.ஜ.க. கூட்டணிக்குள்ள தோல்வி பயத்தின் விளைவு. திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு. இத்தகைய அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களைப் பொதுமக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். தேர்தலில் மக்கள் உரிய பாடம் புகட்டுவர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், "மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி.சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது" எனத் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், "ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் தி.மு.க. பயப்படாது. ரெய்டுக்கு எல்லாம் பயந்திருந்தால், என்றைக்கோ தி.மு.க. செத்துப் போய் புல் முளைத்திருக்கும். தேர்தல் நேரத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர். வருமான வரி சோதனை போன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகம் அல்ல. கண்துடைப்புக்காக அ.தி.மு.க.வினரின் இடங்களில் ரெய்டு; தி.மு.க.வைப் பயமுறுத்தவே ஐ.டி. சோதனை" எனத் தெரிவித்தார்.