அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. அப்பொழுது இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இருப்பினும் இரு தரப்பு தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியை கொடுக்க, கூட்டணி எல்லாம் மேலே உள்ள டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியுள்ளதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தனர். ஆனால் பாஜக - அதிமுக கூட்டணி தொடரக்கூடாது என்பதுதான் அண்ணாமலையின் எண்ணமாக இருக்கிறது. எங்களுடன் கூட்டணி இல்லை என்றால் எப்படி பாஜக வெல்லும்; எப்படி மோடி பிரதமர் ஆவார். எனவே மீண்டும் மோடி பிரதமர் ஆகக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவரது செயல்பாடுகள் உள்ளது.
கர்நாடக தேர்தலில் அண்ணாமலையாலேயே பாஜக தோல்வி அடைந்தது. அதிமுக பிரமாண்ட ஆலமரம். பாஜக ஒரு சிறிய செடி. முதலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் நடந்த 40 சதவீத ஊழலை பற்றி அண்ணாமலை பேசட்டும். சட்டமன்றத் தேர்தலில் பாஜக நான்கு தொகுதிகளில் ஜெயிக்க அதிமுக தான் காரணம். அண்ணாமலையின் போக்கு இப்படியே தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும். அண்ணாமலையின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது பாஜக தேசிய தலைமையின் கடமை. எதற்கும் ஒரு அளவு இருக்கிறது. இதற்கு மேல் பொறுமை காக்க முடியாது. பாஜக உடனான கூட்டணி முறிந்தால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அதை டெல்லி நன்றாக உணர்ந்துள்ளது. கட்டு சோற்றில் கட்டிய பெருச்சாளி போல நொய் நொய் என்கிறார். இப்பொழுதும் சொல்கிறேன் இனிமேல் ஏதாவது பேசினார் என்றால் வாங்கிக் கட்டிக் கொள்வார்.' எனக் கடுமையாக விமர்சித்தார்.