தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஆறாம் தேதி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அதன்பின் வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் 3 அடுக்கு பாதுகாப்புகளுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் ஏதாவது நடக்கலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளன. மேலும் எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அங்கு பாதுகாப்புக்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் நிறுத்தி வைத்துள்ளன.
இதேபோல் ஆளும் அதிமுக அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதேனும் செய்து விடுவார்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய கட்சியின் முக்கிய உறுப்பினர்களை தினம்தோறும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
அரசுத் தரப்பில் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் தினமும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ள இடங்களை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிக பாதுகாப்பாக இருக்க இரு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திமுகவின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பிழிச்சல் என்று சொல்லக்கூடிய ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றுள்ளார்.
இந்த சிகிச்சையின் மூலம் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து ஆயுர்வேத மசாஜ் செய்து மெல்லிசை நீரில் குளித்து உடம்பிலுள்ள தசைகள் மற்றும் நரம்புகள் சீராக செயல்படுவதற்கு எடுக்கப்படும் சிகிச்சைமுறை, இந்த சிகிச்சை முறையால் உடல் மற்றும் மனது மிகுந்த அமைதியாகவும் மிகவும் தளர்வாகவும் உடம்புக்கு தெம்பூட்டும் வகையிலும் அமையும் என்பதால் இந்த சிகிச்சைக்கு தற்போது கேரள மாநிலத்திற்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு பல இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தொண்டர்கள் கண்விழித்து பாதுகாத்துவருகிறார்கள். இந்தநிலையில் இவர் கேரளாவிற்கு ஓய்வெடுக்க சென்று இருப்பது குறித்து தொண்டர்கள் கூறுகையில், திருச்சி மாநகரிலேயே எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன்தான் என்று தொண்டர்கள் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்து கொள்கிறார்களாம்.