தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனும் வெற்றி பெற்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 2% சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றனர். குறிப்பாக நாங்குநேரி தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சியை விட 749 வாக்குகள் கூடுதலாக ஹரி நாடார் பெற்றார். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
இது பற்றி கல்பனா கூறும் போது, சீமானின் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஈழம் குறித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை பிடித்தது தான் நாம் தமிழர் கட்சியில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் சமீபத்தில் சீமான் பேசும் போது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தி பேசியதோடு, அதை நாங்கள் தான் செய்தோம் என்று பகிரங்கமாக கூறினார். சீமானின் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை அதனால் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்தார். அதோடு, நாம் தமிழர் கட்சிக்காக இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தேன். அப்போது என் பிரச்சாரத்தை கேட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்திருந்தால் என்னை மன்னிக்கவும் என்றும் தெரிவித்துள்ளார்.