காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை இன்று ராகுல் துவங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை குறித்து கேள்வி எழுப்பினர் . அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ''ராகுல் காந்தி இன்று 'பாரத் ஜோடோ' என்ற யாத்திரையை துவங்க இருக்கிறார். இதற்கான நோக்கம் இந்தியாவை ஒன்றிணைப்பது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆனால் ராகுல் காந்தி இந்த யாத்திரைக்கு செல்லும்பொழுது தெரியும் நமது இந்தியா மோடியின் தலைமையிலே இணைந்திருக்கிறது. குறிப்பாக முதன்முதலாக முழுமையாக ஆர்ட்டிக்கிள் 370 எடுத்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இந்தியாவுடன் இணைந்திருக்கிறது. இதனை ராகுல் காந்தி அவரது யாத்திரையில் பார்த்துக்கொண்டே செல்வார்.
காங்கிரசில் குடும்பத்தில் ஒருவருக்குதான் பதவி என காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அறிவித்த உடனே சிவகங்கையை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்திற்கு பதவி இருக்கும்போதே ப.சிதம்பரத்திற்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்பட்டது. இப்பொழுது இருக்கும் காங்கிரஸ் தலைவரிடம் போய் என்ன சார் ஒரு குடும்பத்தில் இருக்கும் இரண்டு பேருக்கு பதவி கொடுத்துருக்கீங்க தொண்டர்கள் எல்லாம் பாவம் இல்லையா என்று கேட்டபொழுது, கே.எஸ்.அழகிரி சொன்னார் அவங்க ரெண்டு பெருகும் வேற வேற ரேஷன் கார்டு இருக்கு என்று. இதுதான் காங்கிரசின் நிலைமை பேச்சு ஒன்றாக இருக்கும் செயல் ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் காரர்களுக்கு தெரியும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் காந்தி குடும்பத்தைச் சுற்றி சுற்றி வந்தால்தான் ஞானப்பழம் கிடைக்கும். பல தலைவர்கள் ஞானப்பழத்தை பெரும் முயற்சியில் காந்தி குடும்பத்தைச் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஞானப்பழம் என்பது நல்ல மனிதர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இந்த யாத்திரை மீண்டும் ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவராக கொண்டுவர நடத்தப்படும் நாடகம்'' என்றார்.