இந்தியாவின் கண்களே தற்போது கர்நாடக மாநிலம் பக்கம்தான் திரும்பியுள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வரும், யார் முதல்வர் என்ற விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நேரத்தில், பாஜகவின் தமிழ்நாடு செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நாராயணனை தொடர்புகொண்டோம்.
கர்நாடக மாநில முதல் அமைச்சராக எடியூரப்பா பதவியேற்றுள்ளார். ஆனால், தனி பெரும்பாண்மை கிடைக்காமல், கூட்டணி ஆதரவும் இல்லாமல், ஆட்சியமைப்பது சரிதானா?
சட்டசபையில் நிரூபிப்போம். மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்துப் போட்டியிட்டனர். மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்ததை மீறி மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் கட்சியோடு சேர்வதை மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் சிலர் விரும்பாமல் போகலாம். ஆகையால் மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக தங்களுடைய கட்சி செயல்படுகிறது என்பதால் சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கலாம். மக்களுடைய தீர்ப்புக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
1996ல் மத்தியில் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்து பின் 13 நாட்களில் கலைந்தது. அந்த அபாயம் இல்லையா?
அது போன்ற அபாயம் வராது. 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற காரணத்தினால் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதற்கு ஆளுநர் அனுமதி வழங்கினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. யாரை அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்க கவர்னருக்கு உரிமை இருக்கிறது.
கர்நாடக எம்.எல்.ஏக்கள் ரிஸார்ட்டுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. கூவத்தூர் ஃபார்முலா அங்கும் நடக்கிறதா?
இவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
தங்கள் எம்எல்ஏக்களை மிரட்டுகிறார்கள், வலை வீசுகிறார்கள் என்று குமாரசாமியே கூறியிருக்கிறாரே?
என்ன ஆதாரம் இருக்கிறது? சுவர்களுக்கும் காது உண்டு என்பார்கள். இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எது நடந்தாலும் சமூக ஊடகங்களில் வெளியாகும். 'குமாரசாமியிடம் ஆயிரம் கோடி தருவதாக காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கலாம், 5 ஆயிரம் கோடி செலவு பண்ணுங்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று குமாரசாமி சொல்கிறார்' என்று நான் கூட சொல்லலாம். அப்படித்தான் குமாரசாமி வாய்க்கு வந்ததை சொல்கிறார்.
காங்கிரஸ், மஜத கூட்டணி வைத்திருந்தால் பாஜக இத்தனை தொகுதிகளில் வென்றிருக்க முடியாது என்று மம்தா பானர்ஜி உள்பட பலரும் கூறுகிறார்களே?
காங்கிரஸ் வெற்றி பெறக்கூடாது என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான் காங்கிரஸ் அமைச்சர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள். முதல் அமைச்சர் சொந்தத் தொகுதியிலேயே தோற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டதால்தான் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஒருவேளை காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்திருந்தால், குமாரசாமி முன்பே இந்த முடிவை எடுத்திருந்தால் பாஜகவுக்கு அது சாதகமாக அமைந்திருக்கும். பாஜக குறைந்தது 175 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?
பாஜக நிச்சயம் வெற்றி பெறும். எடியூரப்பா 5 வருடங்கள் முழுமையாக ஆட்சியை நடத்துவார்.