வரும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் அறிவித்திருந்த நிலையில் ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முரண், மோதல் என அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் கிளம்பி, கடைசியில் சலசலப்புடன் வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் நேற்று டெல்லி கிளம்பினார். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டம் கட்சி விதிகளுக்கு புறம்பானது. தமிழ்மகன் உசேன் தற்காலிக அவை தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்ஸின் ஒப்புதல் இல்லாமலே அவர் அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே தவறு எனும் பட்சத்தில் அவர் ஜூலை 11 ஆம் தேதி அறிவித்துள்ள பொதுக்குழுக் கூட்டமும் செல்லாது; அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.