மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தொண்டையில் புண் இருப்பதால் சத்தமாகப் பேச முடியாது. இருந்தாலும் மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நீங்கள் ஆத்தூருக்கு வந்தே தீர வேண்டும். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனச் சொல்லியதை அடுத்து அவர்களது அன்புக் கட்டளையை ஏற்று உங்களைச் சந்திக்கிறேன்.
எண்ணிப் பாருங்கள்... கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதலமைச்சரானார். அதற்குப் பிறகு உதயநிதியை திமுகவின் முன்னணி தலைவர்கள் வரிசையில் கொண்டு வருவதற்கு முன்னோட்டமாக நாளை அந்த முடிசூட்டு விழா நடைபெறுகிறது. உதயநிதி அமைச்சராகிவிட்டால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா? இல்லை. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார். அது ஒன்றுதான் நடக்கும். வேறு என்ன நடக்கப் போகிறது.
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். ஏனென்றால், நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காத ஆட்சி என்றால், அது திமுக ஆட்சி. ஒரு மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சர் தான் இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மருமகன், அவருடைய மகன் என நான்கு முதலமைச்சர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஒரு முதலமைச்சருக்கே தாக்குப்பிடிக்க முடியாது. நான்கு முதலமைச்சர் இருந்தால் இந்த தமிழ்நாடு தாக்குப்பிடிக்க முடியுமா?” என்றார்.