தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17 துவங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓபிஎஸ் முதல்வரிடம் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும் வரையில் நான் கருத்து கூற விரும்பவில்லை. அனைவரும் ஆரம்பத்தில் இருந்து அவருடைய நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டு உள்ளார்கள். யார் மீது குற்றம் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட அவர் சட்டமன்றத்தில், மு.க.ஸ்டாலினிடம் பேசினேன் என்று சொல்லி இருக்கிறார். அது முற்றும் உண்மைக்கு புறம்பானது. நான் இதுவரை யாரிடமும் கடுமையான சொல்லை சொன்னதில்லை. நான் முதல்வரை சந்தித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால் அவர் விலகத் தயாரா என கேட்டு இருக்கிறேன். அதற்கு உரிய பதிலை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
அதிமுக என்பது தொண்டர்கள் இயக்கம். இத்தனை பிரச்சனைகளை யார் உருவாக்கினார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும். இவ்வளவு பெரிய பாவத்தை செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது பழி போடுவது நியாயமான செயல் அல்ல. ஊர்ந்து ஊர்ந்து பதவியை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். என்னைப் பற்றி தொண்டர்களுக்கும் தொண்டர்களை பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும் உரிய நேரத்தில் உரிய முறையில் அவர்களை நான் அணுகுவேன்” எனக் கூறினார்.