ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை தி.நகரில் தான் தங்கியுள்ள இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார் சசிகலா. பின்னர் பேசிய சசிகலா, "உண்மையான உடன்பிறப்புகள் ஒன்றாக இணைந்து, தமிழக சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு, ஜெயலலிதா நம்மிடம் சொல்லிவிட்டுச் சென்ற, ‘மீண்டும் தமிழகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும், நம்முடைய ஆட்சி இருக்க வேண்டும்’ என்பதுதான்.
அதை மனதில் நிறுத்தி நம்முடைய உடன்பிறப்புகள், ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும். அதைச் செய்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள்; நிச்சயமாக இதைச் செய்வீர்கள், நானும் உங்களுக்குத் துணை நிற்பேன் என்பதை அன்போடு தெரிவித்து, நன்றி கூறுகிறேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து சசிகலாவை, ச.ம.க. தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் சென்று சந்தித்தார். இதேபோல் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் சந்தித்தனர்.
இதுதொடர்பாக தனியரசு எம்.எல்.ஏ. நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார். அப்போது,
சசிகலாவை சந்திப்பீர்களா?
நிச்சயம் சந்திப்பேன். விரைவில் சந்திப்பேன்.
உண்மைத் தொண்டர்கள் என யாரை குறிப்பிடுகிறார் சசிகலா. சிலர் அமமுக தொண்டர்களைக் குறிப்பிடுகிறார் என்கின்றனர், சிலர் அதிமுக தொண்டர்களைக் குறிப்பிடுகிறார் என்கின்றனரே?
அதிமுக ஒரு பிரிவு, அமமுக ஒரு பிரிவு என சசிகலா பார்க்கவில்லை. பொதுவாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். உண்மையான தொண்டர்கள் தேனீக்களைப் போலப் பணியாற்றி அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிலைப்பாடு என்ன?
நாங்கள் இன்னும் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் நீடிக்கிறோம். 2021- சட்டமன்றத் தேர்தல் குறித்து எங்கள் கட்சி கூடி முடிவெடுக்கும்.