கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பாகியது.
இந்நிலையில் இன்று பேரவையில், அம்மா கிளினிக் மூடல் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக- திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. முன்னதாக இது குறித்து பேசியிருந்த அமைச்சர் மா.சுப்ரமணியன் ''ஏற்கனவே வேறு பயன்பாட்டில்இருந்த கட்டிடத்தில் பெயிண்ட் அடித்து ஒரு போர்டை வைத்து திறந்து வைத்தார்கள். இந்த மருத்துவர்கள் எல்லாம் ஏற்கனவே கரோனா இரண்டாவது அலையில் பயன்படுத்தப்பட்டார்கள். இப்பொழுதுகூட அவர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு கரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்'' எனக்கூறியிருந்தார்.
இன்று நடைபெற்ற விவாதத்தில், அமைச்சர் மா.சுப்ரமணியன், ''சைதாப்பேட்டையில் கழிவறை, சுடுகாட்டில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டிருந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் தயார் என்றால் நேரில் சென்று அதனை காட்ட நானும் தயார்'' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், ''அமைச்சரின் பேச்சை அவைகுறிப்பில் இருந்து நீக்கவேண்டும்'' என வலியுறுத்தினார். அதனைத்தொடர்ந்து முதல்வர், ''அதிமுக ஒரு குழுவை ஏற்பாடு செய்தால் அம்மா மினி கிளினிக் இருந்த இடத்தை அமைச்சர் காட்ட தாயார்'' என்றார்.