கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் திமுக தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான வசந்தம் கார்த்திகேயன், எம்.எல்.ஏ. உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியின் 216 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவப்படுத்தினார். 700 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், 200 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டி, 60 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனம், 450 விவசாயிகளுக்கு பேட்டரியில் உருவான ஸ்ப்ரேயர் உட்பட சுமார் 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அனைத்து மாவட்டச் செயலாளர்களிடமும் எத்தனை நிகழ்ச்சிகள் வேண்டுமானாலும் உங்கள் மாவட்டத்தில் நடத்துங்கள். நான் அதில் நிச்சயம் கலந்து கொள்கிறேன். அந்த நிகழ்ச்சியின் போது கண்டிப்பாக கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று கூறி உள்ளேன். அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
பெரியார், அண்ணாவை நான் பார்த்தது இல்லை. தலைவர் கலைஞர், பேராசிரியர் ஆகிய இருவரையும் நான் பார்த்துள்ளேன். ஆனால் கட்சியின் முன்னோடிகளாக உள்ள நீங்கள் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியரை பார்த்துள்ளீர்கள்; பழகி உள்ளீர்கள். கட்சி முன்னோடிகளான உங்களை நான் நேரில் பார்க்கும்போது பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் மறு உருவமாக உங்களைக் காண்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டம் திமுகவின் கோட்டை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக தலைவர் அடையாளம் காட்டும் வேட்பாளருக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும். அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, கள்ளக்குறிச்சி நகர செயலாளரும் நகர் மன்றத் தலைவருமான சுப்பராயன், ஒன்றியச் செயலாளர்கள் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, சத்தியமூர்த்தி கனகராஜ், கிருஷ்ணமூர்த்தி ஐயனார், ராஜேந்திரன், துரைமுருகன், பெருமாள், பாரதிதாசன், அசோக்குமார் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.