சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கும் சிறப்பு தீர்மானத்தை நத்தம் விஸ்வநாதன் கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து, கட்சி விதிகள், கோட்பாடுகளுக்கு எதிராக செய்யப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பொதுக்குழு நீக்கியுள்ளது.
இந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "என்னை நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ அதிகாரமில்லை. நான் இன்றைக்கு அறிவிக்கிறேன். எடப்பாடி பழனிசாமி அவர்களையும், கே.பி.முனுசாமி அவர்களையும் கழக சட்ட விதிக்கு புறம்பாக, தன்னிச்சையாக அறிவித்ததற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டு அவர்கள் இருவரையும் கழகத்தினுடைய அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, என்னை நீக்கியதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். தொண்டர்களுடன் இணைந்து நீதிமன்றம் சென்று உரிய நீதியைப் பெறுவோம்" எனத் தெரிவித்தார்.