செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம் தொடர்பாக இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரிய அவரது தரப்பின் மனு, செந்தில் பாலாஜியை காவலில் விசாரிக்கக்கோரிய அமலாக்கத்துறையின் மனு உள்ளிட்ட 3 மனுக்கள் மீதும் இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 3 மனுக்கள் மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது என்று கூறி தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம் தான் இந்த கைது நடவடிக்கை. தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டு அவர்களின் செயல்பாடுகளை முடக்க நினைக்கிறது பாஜக. மத்திய அரசின் அச்சுறுத்தலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது. இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்படுவோம். அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் 95% பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். அதிமுக, பாஜகவின் கொங்குநாட்டு கனவை கலைத்தவர் செந்தில் பாலாஜி. உள்ளாட்சி தேர்தலில் மேற்கு மண்டலத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றதற்கு செந்தில் பாலாஜியே காரணம்.
காலையில் இரவு 2 மணிக்கு அவரை அழைத்துப் போவதை ஊடகத்தில் பார்த்தேன். உடனடியாக மருத்துவமனைக்கு போனேன். துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவர் இதற்கு முன் இப்படி பதறியதை பார்த்ததே இல்லை. அந்த அளவிற்கு அவரை வலி பிடுங்கித் தின்றுவிட்டது. செந்தில் பாலாஜிக்கு எவ்வித உதவிகளையும் செய்யக்கூடாது என்று வந்தவர்களையெல்லாம் தடுத்துக் கொண்டிருந்தார்கள். செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தை கண்டு அவருக்கு தேவையாக சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி, ‘நானும் மருத்துவர் தான். சீரற்ற முறையில் தான் இதயத்துடிப்பு உள்ளது’ என்று கூறினார்.
காலை சிறப்பு மருத்துவர் அவரை பரிசோதித்தார். செந்தில் பாலாஜிக்கு அடைப்புகள் இருப்பது தெரிகிறது. இவருக்கு ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்றார். காலை 10 மணிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. அதில் 3 இடங்களில் அடைப்புகள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மூத்த மருத்துவர் சொன்னார்.
இந்த மருத்துவர்கள் சொன்னதில் இருந்து மாற்றுக்கருத்துகளைப் பெற வேண்டும் என்பதற்காக கலைஞர் நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து மத்திய அரசின் மருத்துவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களும் அங்கு பார்த்துவிட்டு, ‘ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சொன்ன குறைகள் அனைத்தும் உண்மை. இவர் இப்போது ஆபத்தான நிலையில் தான் உள்ளார்’ என்று சொல்லியுள்ளனர். அதற்கான சான்றிதழும் உள்ளது” என்றார்.