ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் யார் நடத்துவது என்ற பிரச்சனை எழுந்தது. அப்போது சசிகலாவே கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை வகிக்கலாம் என்று அதிமுகவினர் முடிவெடுத்தனர். இதனையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததால் சசிகலா பெங்களூரு சிறைக்கு போகும் நிலை ஏற்பட்டது. பின்பு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக பிரிந்தது. அதில், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி மத்திய அரசின் அழுத்தம் காரணமாக சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து விட்டு ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுகவில் இணைத்தனர்.
பின்பு தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தனர். இதனால் அவர்களது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. அந்த 18 எம்.எல்.ஏ. க்களில் முக்கியமானவர் வெற்றிவேல். நேற்று வடசென்னை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானகிருஷ்ணன் தலைமையில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் யானைகவுனியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் பேசும் போது, தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டத்தை கொண்டு வரும் நோக்கத்தோடு தேனி மாவட்டத்தில் ஓ.பன்னிசெல்வத்தின், மகனை வெற்றி பெற செய்தார்கள். ஓ.பன்னிச்செல்வம் தர்மயுத்தம் என்ற ஒரு யுத்தத்தை தொடங்கினார்.
ஆனால் அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் என்னிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோ ஆதாரங்கள் இருப்பது ஓ.பன்னிசெல்வத்திற்கு தெரியவில்லை.இன்னும் ஜெயலலிதா சாப்பிடுகின்ற ஏராளமான வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதை தேவைப்படும் நேரத்தில் வெளியிடுவேன் என்று பேசியுள்ளார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மற்றும் ஆடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எந்த வீடியோ வெளிய வரப் போகிறது என்ற அச்சம் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.