இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திண்டுக்கல் மணிக்கூண்டில் வேனில் இருந்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். நான் சொல்கிறேன் ஆமாம் கலைஞரின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரின் குடும்பம் தான். மோடி சொல்கிறார் தி.மு.க.வினருக்கு தூக்கம் போய்விட்டது என்று பேசி வருகிறார். ஆமாம் தூக்கம் போய் விட்டது உங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக எங்களுக்கு தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது. உங்களை ஆட்சியிலிருந்து அகற்றாமல் நாங்கள் தூங்கப் போவதில்லை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா அல்லது மிஸ்டர் 28 பைசாவா என மோதி பார்ப்போமா. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நமது வேலை ஒன்றே ஒன்றுதான். அனைவரையும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்கை செலுத்தி மோடிக்கு தலையில் மிகப்பெரிய கொட்டு வைத்தாக வேண்டும். வைப்பீர்களா?
கடந்த 10 வருடமாக நரேந்திர மோடி அவருக்கு ஒரு செல்லப் பெயர் வைத்து உள்ளேன் எடப்பாடி பழனிச்சாமிக்கு நமது முதல்வர்களும் பாதம் தாங்கிய பழனிச்சாமி என்று பெயர் வைத்துள்ளார். அதேபோல நரேந்திர மோடிக்கு நான் ஒரு பெயர் வைத்துள்ளேன். மிஸ்டர் 28 பைசா. கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு பக்கம் தலை வைத்து பார்த்ததில்லை. பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது மதுரைக்கு வந்து ஒரே ஒரு செங்கலை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக கூறினார். அந்த செங்கல்லையும் நான் எடுத்து வந்து விட்டேன். தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. தேர்தல் வந்ததும் மோடி கடந்த 10 நாட்களாக தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் புயல் அடித்தபோது வரவில்லை. கடந்த டிசம்பர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் புயல் வெள்ளம் வந்து பெரும் சேதம் ஏற்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் நின்று மக்கள் பணி செய்தனர். ஆனால் ஒன்றிய பிரதமர் வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார். எல்லாத்தையும் பார்த்துவிட்டு காசு தருகிறேன் என கூறினார். ஆனால் முதலமைச்சர் தார்மீக உரிமையில் எங்கள் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன பணம் கொடுக்கிற மெஷினா என்ன கேள்வி கேட்டார். தமிழகத்தில் வெள்ளம் வந்த போதும், புயல் வந்த போதும் பிரதமர் மோடி எட்டிப் பார்க்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாங்கள் என்ன ஏடிஎம் மிஷினா என எங்களை கேள்வி கேட்டார். அதற்கு நான் திருப்பி கேட்டேன். இது உங்க அப்பன் வீட்டு பணமா...இது எங்கள் வரிப்பணம் என்று. இது தவறு என்றார். தமிழகத்துக்கு வெள்ளம், புயல் வந்தபோது வராத பிரதமர், தற்போது தேர்தல் என்றதும் ஓடி ஓடிவருகிறார். தேர்தல் வந்ததால் தமிழகத்தை சுற்றி வருகிறார். பாசிச ஆட்சியை விரட்டும் வரை நாம் அனைவரும் தூங்கக் கூடாது”எனப் பேசினார்.