“நான் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவை பிளக்க பலரும் முயற்சி செய்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது” என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் நடந்த அதிமுக ஒன்றிய செயலாளர் நடராஜன் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “எம்.ஜி.ஆர் இருந்தபோது திண்டுக்கல் மாவட்டம், அதிமுகவின் கோட்டையாக இருந்தது. ஜெயலலிதா இருந்தபோது எக்குக் கோட்டையாக மாறியது.
நான் பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆளுங்கட்சியாக இருந்தபோதும் போராட்டம்தான்; எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் போராட்டம் தான். போராட்டங்களை எல்லாம் தாண்டி இப்போது வெற்றி பெற்றுவிட்டேன். கட்சி தொண்டர்களின் ஆதரவால் வலிமையோடும் பொலிவோடும் இருக்கிறது. அதிமுகவை பிளக்க பலரும் முயற்சி செய்கின்றனர்; அது ஒரு போதும் நடக்காது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியில் எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றினோம். மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து திட்டங்களை நிறைவேற்றி மக்களாட்சி நடைபெற்றது. தற்போது சர்வதிகார ஆட்சி நடக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி நடந்த வண்ணமாக உள்ளன. அந்த அளவுக்கு திறமையற்ற முதல்வர் ஆட்சி செய்கிறார். உங்கள் மூலமாக நல்ல பதிலை வழங்க வேண்டும்” என்று பேசினார்.