அதிமுகவுக்கு யார் தலைமை என அக்கட்சியின் தொண்டர்களுக்கே தெரியவில்லை என்ற நிலையில் எப்படி அவர்களால் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் விமர்சித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எதிர்க்கட்சியாக அதிமுக சிறப்பாக செயல்படவில்லை. அதுதான் உண்மை. எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்பதே தெரியவில்லை. அதிமுக தொண்டர்களுக்கே யார் தலைவர் என்று தெரியவில்லை. ஓபிஎஸ்க்கும் வணக்கம் சொல்கிறார்கள். இபிஎஸ்க்கும் வணக்கம் சொல்கிறார்கள். அதிமுக கொடி வைத்துக்கொண்டு சசிகலா வந்தாலும் வணக்கம் சொல்கிறார்கள். அவர்களுக்கே குழப்பம் ஏற்படுகிற நேரத்தில் யார் தலைமை என்று நான் சொல்ல முடியாது. அனைத்து பிரச்சனைகளும் முடிந்த பின் நாங்கள் தான் தலைமை என வரும்போது அதற்கான பதிலை சொல்லலாம்.
விஜயகாந்த் நன்றாக உள்ளார். பழைய மாதிரி வருவாரா என்றால் அது கடினம். ஆனால் உடல்நிலை ரீதியாக நன்றாக உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவேண்டும் என நினைத்தால் அவர் நிச்சயம் வருவார். தேமுதிக கட்டமைப்பு இன்னும் அனைத்து மாநிலங்களிலும் அப்படியே தான் இருக்கிறது. ஒருவர் இருவர் வருவார்கள் போவார்கள். ஆனால் கட்டமைப்பு அப்படியே தான் இருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் பின்னடைவில் இருப்பதால் பலமிழந்து காணப்படலாமே தவிர கட்டமைப்பு நன்றாக உள்ளது” எனக் கூறினார்.