முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலும், அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று (15.12.2021) காலைமுதல் சோதனை நடத்தினார்கள். நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்நிலையில், தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் இதுவரை 2.16 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தங்கமணி, ''இன்றைய தினம் என்னுடைய வீட்டிலும் என்னைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது யாரென்றே தெரியாதவர்கள், கழகத்தினர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்கள் என அனைவரது வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் என் வீட்டில் இருந்து 2.16 கோடி ரூபாய் கிடைத்ததாகப் பல செய்திகளில் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய வீட்டில் இருந்து ஒரு பொருள் கூட எடுக்கவில்லை. என் செல்ஃபோனை மட்டும்தான் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். வேற எதுவுமே என் வீட்டிலிருந்து எடுக்கவில்லை. கிரிப்டோகரன்சியில் நான் முதலீடு செய்திருப்பதாக எஃப்.ஐ.ஆரில் யூகத்தின் அடிப்படையில் என்று சொல்லியிருக்கிறார்கள். கிரிப்டோகரன்சியினுடைய விளக்கமே எனக்குத் தெரியாது. அதில் எப்படி முதலீடு செய்வது என்றே எனக்குத் தெரியாது. இதுபோல் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் பழிவாங்கும் நோக்கத்தோடு சோதனை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் இந்த இயக்கம் எந்தச் சூழ்நிலையிலும் எந்த தொண்டனும் அஞ்ச மாட்டான் என்பதற்குச் சான்றாக இன்றைய தினம் காலையிலிருந்து அதிமுகவினர் வெயில் என்றும் பாராமல் வந்துள்ளனர். பழிவாங்கும் நோக்கத்தோடு நடைபெற்ற இந்த சோதனைக்கு முழு காரணம் செந்தில் பாலாஜிதான். செந்தில் பாலாஜியை பொறுத்தவரை என்னை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காகச் செய்கின்றார். ஆயிரம் செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு சட்டத்தின் மீது, ஆண்டவனின் மீது, நீதி மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன்'' என்றார்.