நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 22ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்ர். அதில், இளைஞர்களுக்கான வேலை, விவசாயிகள் நலன் திட்டங்களுக்காக பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சியமைக்க உதவிய சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்தவித திட்டங்களுக்கும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், தமிழ் அல்லது திறக்குறளை பயன்படுத்தும் பா.ஜ.க அரசு, இந்த முறை தமிழ் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த தி.மு.க சார்பில் கள்ளக்குறிச்சி தி.மு.க தெற்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி தி.மு.க வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.கவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.