கோவையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஆளுநர் மற்றும் பாஜகவினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாடியுள்ளார்.
கடலூரில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர் அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் தமிழக பாஜகவினரும் ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு எதிராக ஆளுநர் சொல்லுகிறார் எனும் போது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர் ஆளுநர் என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ் தொண்டராகவே செயல்படுகிறார். அரசு விழாக்களில் அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார். திமுகவிற்கு எதிரான அவதூறுகளைப் பரப்புகிறார். வடமாநிலங்களைப் போல வன்முறையைத் தூண்டி குளிர்காய பாஜக நினைக்கின்றது” எனக் கூறினார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னையில் தமிழக மீனவர்களை இந்தியக் கடற்படையே சுட்டது, இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழக உரிமைகள் பறிக்கப்படுவது என மூன்று பிரச்சனைகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.